மடிக்கணினி வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுமியை அனைவரும் பாராட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனிச்சம் பாளையம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிந்துஜா என்ற 5-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கின்றார். இந்தச் சிறுமி மடிக்கணினி வாங்குவதற்காக தனது உண்டியலில் பணம் சேமித்து கொண்டிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் வண்ணம் பல்வேறு தரப்பினரும் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதை இந்த சிறுமி அறிந்துள்ளார்.
இதனால் தனது உண்டியலில் மடிக்கணினி வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாக இந்த சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் அவரது தந்தை உடனடியாக அந்த உண்டியலில் இருந்த 1500 ரூபாய் பணத்தை வங்கியில் கொடுத்து வரைவோலையாக பெற்றுக் கொண்டார். அதன் பின் இந்த வரைவோலையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக மாணவி சிந்துஜா அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு சிறு வயதிலேயே மாணவியின் உதவும் மனப்பான்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.