தோழிகளுடன் குளிக்க சென்ற மாணவி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாயம்பாளையம் பகுதியில் ரங்கசாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு துளசிமணி, கிருத்திகா, ரித்திகா ஸ்ரீ ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இதில் அவிநாசியில் உள்ள அரசுப் பள்ளியில் கிருத்திகா ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னேரி பாளையம் அண்ணமார் கோவில் குட்டையில் குளிப்பதற்காக கிருத்திகா தனது தோழிகளுடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிருத்திகா குட்டையில் மூழ்கியதால் அதிர்ச்சி அடைந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
ஆனாலும் கிருத்திகாவை காப்பாற்ற இயலாததால் உடனடியாக அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குட்டையில் இறங்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த கார்த்திகாவின் உடலை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர். அதன்பின் அவினாசி காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.