10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி நேரு நகரில் கட்டிட தொழிலாளியான சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானு என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாகராயம்பாளையம் பகுதியில் இருக்கும் தனது தாத்தாவான சின்னச்சாமி என்பவரது வீட்டில் தங்கியிருந்து 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் 4-ஆம் வகுப்பு படிக்கும் போதே தனது தாத்தா வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் பெற்றோருடன் வாழ ஆசைப்பட்ட இந்த சிறுமி சரவணகுமாரை தொடர்பு கொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் சரவணகுமார் தனக்கு வேலை அதிகமாக இருப்பதாகவும், பிறகு வந்து அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து பல முறை தன்னை அழைத்து செல்லுமாறு கூறியும் பெற்றோர் வராததால் பானு மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பானு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய சின்னசாமி தனது பேத்தி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உதவியோடு உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.