சிறுமியை பணியில் அமர்த்திய குற்றத்திற்காக பட்டாசு ஆலை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் சுப்புமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பனையடி பட்டியில் சொந்தமாக பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிப்பதாகவும், சிறுமிகள் பணிகளில் ஈடுபடுத்த படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் வருவாய்த் துறையினர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி தாழம்பூ ராஜா பட்டாசு ஆலைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்போது சரவெடி தயாரிக்கும் பணியில் மாடசாமி என்பவரது மகளான ஆர்த்தி என்ற சிறுமி ஈடுபட்டிருந்ததை அவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பட்டாசு ஆலையில் அனுமதியின்றி 30 அட்டை பெட்டிகளில் இருந்த வெடிகளையும், அனுமதியின்றி பேன்சி ரக வெடிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகளையும் பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உரிமையாளரான சுப்புகனி மீது வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.