முடைந்த கீற்றுகளை ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் பெண்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதியில் கீற்றின் மூடையும் தொழிலை அப்பகுதி பெண்கள் சிறு தொழிலாக செய்து வருகின்றனர். கடந்த வருடம் கொரோனாவின் முதல் அலைக்கு பின்னர் சிறிது புத்துணர்ச்சி கண்ட கீற்று முடையும் தொழில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக முடங்கி போயுள்ளது.
பொதுவாக கிராமப்பகுதிகளில் முடையும் கீற்றுகளை வியாபாரிகள் வாங்கி வேனில் ஏற்றிக்கொண்டு நாகப்பட்டினம், காரைக்கால், அறந்தாங்கி, ஆலங்குடி போன்ற பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தனர். தற்போது ஊரடங்கு போக்குவரத்து இல்லாததால் வியாபாரிகள் கீற்றுகளை வாங்க வரவில்லை.
இதனால் முடைந்து வைத்திருக்கும் கீற்று மட்டைகள் அனைத்தும் விற்பனை இன்றி அவரவர் வீடுகளிலேயே தேங்கிக் கிடக்கிறது. இந்தத் தொழிலை நம்பி குடும்பம் நடத்தி வந்த பெரும்பாலான பெண்கள் வருமானமின்றி ஏமாற்றம் அடைந்துள்ளனர்.