ஸ்மார்ட் போன்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசானது தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சியானது அதிகரித்து வருகிறது. கடந்த 2019- முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 7.1 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்து இருப்பதாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) கூறியிருந்தது. இதே காலக்கட்டத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை 6 சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கல்வி முறையால் ஸ்மார்ட்போன்களின் விற்பனை மேலும் அதிகரித்தது. இதனையடுத்து ஸ்மார்ட் போன்கள் இல்லாதவர்களை காண்பது அரிதாகியது.
இந்நிலையில் ஸ்மார்ட் போன்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை சார்பாக “இந்திய தொழில் கூட்டமைப்பின் கூட்டணி உச்சிமாநாடு 2021” தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் போன்ற பெரும்பாலானோர் பங்கேற்றனர்.
அதன்பின் விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது “உலக அளவில் ஸ்மார்ட் போன்கள் உற்பத்தியில் இந்தியா 2-ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்த 4-5 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி மூலமாக ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000-க்கு கீழே வந்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் விலையை இன்னும் குறைக்க அதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதாவது கடைசி மைல்வரை ஸ்மார்ட் போன்கள் சென்றடையும் வகையில் விநியோக சங்கிலி செலவுகளை குறைத்தல் மற்றும் இந்தியாவின் வடிவமைப்பு திறன்களை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று பேசினார்.