மகாராஷ்டிராவில் சிகரெட் மற்றும் பீடிகளை தனித்தனியாக விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுப் பழக்கம் மற்றும் புகை பழக்கம் நம் நாட்டில் இளைஞர்களை சீரழித்து வருகிறது. இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனால் இவற்றுக்கு முற்றிலும் தடை விதித்தால் மட்டுமே இந்த பழக்கத்தில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள் என்பதால் அதை மேற்கொள்வதற்கான யோசனைகளும் ஒருபுறம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக மகாராஷ்டிராவில் பீடி சிகரெட்டை தனித்தனியாக விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
சிகரெட் வாங்கும் போது புகை பிடித்தலின் தீமையை உணர்த்தும் படங்கள் இருப்பதால் விழிப்புணர்வு ஏற்படும் என்பதாலும், முழு பாக்கெட் வாங்க இளைஞர்களுக்கு பொருளாதாரம் இருக்காது என்பதால் புகைப்பழக்கம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், முழு பாக்கெட் சிகரெட் விற்பனை செய்யப்படும்போது,
இளைஞர்கள் வாரம் ஒருமுறை அல்லது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மாதம் ஒருமுறை என ஆரம்ப காலகட்டத்தில் வாங்கத் தொடங்கி படிப்படியாக அப்படி வாங்குவதை விரும்பாமல் புகைப்பழக்கத்தை விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது ஒரு நல்ல முயற்சி. இருப்பினும் அவர்களை இம்மாதிரியான போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்க மேற்கொண்டு தொடர் முயற்சிகளை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.