அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி அத்தொகுதியில் வீடு கட்ட போவதாக அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி ரானி போட்டியிட்டார். இத்தொகுதியில் ஸ்மிருதி ரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பல ஆண்டுகள் காங்கிரஸ் வசம் இருந்த அமேதி தொகுதியை பாஜக கைப்பற்றியது. கடந்த 2014-ம் ஆண்டு ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி போட்டியிட்டார்.
ஆனால் அவர் தோல்வியை தழுவினார். இந்த முறை காங்கிரசை வீழ்த்தியது பாஜகவிற்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. ஆனால் காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஸ்மிருதி இரானி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பதவியேற்ற போது சக உறுப்பினர்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.
இதையடுத்து ஸ்மிருதி இரானி தனது தொகுதியின் மீது கவனம் செலுத்தி வருகிறார். அதன் படி அமேதியில் புதிதாக சொந்த வீடு கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். உத்திரபிரதேசத்தில் ரூ 30 கோடி சாலை திட்டத்தின் தொடக்க விழாவில், அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா முன்னிலையில் ஸ்மிருதி இரானி வீடு கட்டுவதாக அறிவிதார்.