Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்குக் கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் விமானத்தில் பெருமளவில் கரன்சி நோட்டுகள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையைச் சேர்ந்த ஷர்மிளா (33), கோவையைச் சேர்ந்த மகாலட்சுமி (33), திருப்பூரைச் சேர்ந்த சரவணசெல்வி (46) உள்பட நான்கு பெண்களை சுங்கத்துறை அலுவலர்கள் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். நான்கு பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில், துணிகளுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த அமெரிக்க டாலர்களைக் கண்டுபிடித்தனர். இவர்களிடமிருந்து 20 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர். மேலும், 31 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்தியப் பணமும் கைப்பற்றப்பட்டது.

பணத்தைக் கைப்பற்றிய நிலையில் நான்கு பெண்களிடமும் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |