குளியலறையில் பதுங்கியிருந்த பாம்பு பிடிபட்டபோது ஏராளமான குட்டிகளை ஈன்றுள்ளது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கோவில்மேடு திலகர் வீதியில் இருந்த வீட்டின் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. அதனை கண்ட வீட்டின் உரிமையாளர் மனோகரன் அதே பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் முரளி என்பவரிடம் தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த முரளி குளியல் அறையின் மூலையில் பதுங்கி இருந்த பாம்பை மீட்டு தான் கொண்டு வந்த பையில் வைத்து எடுத்துச் சென்றார். அதை வனப்பகுதிக்குள் விடுவதற்காக சென்றபோது பிடிபட்ட ஒரு மணி நேரத்திற்குள் அந்த பாம்பு குட்டிகளை ஈன்று எடுக்க தொடங்கியுள்ளது.
இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான முரளி பையை ஒரு ஓரமாக வைத்துவிட்டார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பாம்பு 35 குட்டிகளை ஈன்றுள்ளது. பின்னர் இன்று சத்தியமங்கலம் வனப்பகுதியில் குட்டிகளுடன் பாம்பை விட இருப்பதாக கூறியுள்ளார். உடலில் அதிக அளவு நச்சுத்தன்மை கொண்ட இந்த கண்ணாடிவீரியன் பாம்பு குட்டி போடும் வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.