ஒரு மாதத்தில் 8 முறை ஒரே சிறுவனை பாம்பு தொடர்ந்து கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் கிராமத்தை சேர்ந்த யாஷ்ராஜ் மிஸ்ரா என்ற சிறுவன் பலமுறை பாம்பிடம் கடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளான். கடந்த மாதம் 25ஆம் தேதி சிறுவனை கடைசியாக பாம்பு கடித்துள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சிறுவனை ஒவ்வொரு முறையும் ஒரே பாம்புதான் கடித்துள்ளது. எதற்காக அந்த பாம்பு அச்சிறுவனை குறிவைக்கிறது என்ற காரணத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறுவனும் பாம்பு பற்றிய அச்சத்தினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளான்.
சிறுவனின் உயிரைக் காப்பாற்ற பலமுறை குடும்பத்தினர் பூஜை செய்துள்ளனர். பாம்பு பிடிப்பவர்கள் வைத்து குறிப்பிட்ட பாம்பை பிடிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அனைத்திலும் ஏமாற்றமே மிஞ்சியதாக சிறுவனின் தந்தை சந்திரமௌலி கூறியுள்ளார். மூன்றாவது முறை சிறுவன் அதே பாம்பிடம் கடிபட்டதும் அவனை வேறு கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு பெற்றோர் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிறுவன் அதை பாம்பை உறவினர் வீட்டிலும் பார்த்ததாக கூறியுள்ளான்.
அவன் கூறிய மறுநாளே அப்பாம்பு சிறுவனை கடித்துள்ளது. இவ்வாறு ஒரு மாதத்தில் எட்டு முறை ஒரே பாம்பு சிறுவனை கடிக்க தொடர்ந்து மருத்துவமனை சென்று சிகிச்சை எடுப்பதுமாக இருந்துள்ளது அக்குடும்பம். ஒரு சிறுவனை ஒரே பாம்பு தொடர்ந்து இத்தனை முறை கடிக்குமா என்பது ராம்பூர் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு சிறுவன் உயிர் பிழைத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.