சீமானின் சர்சை கருத்து குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.சீமானின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில் ஆங்காங்கே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சீமானின் பேச்சு குறித்து விக்கிரவாண்டி பகுதிக்குட்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. சீமான் பேசிய அந்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. மேலும் என்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் சீமான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார். சீமான் எங்கு பேசினார் , என்ன பேசினார் என்று அந்த வீடியோ ஆதாரத்துடன் அந்த அறிக்கையை கேட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார் . மேலும் இதை இந்திய தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப உள்ளதாகவும் , இதுகுறித்து அவர்கள் தான் ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.