தமிழ்நாடு முழுவதும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் 4, 224 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் பத்து ரூபாய் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராசிபுரத்தில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜு உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நல்வினை விஸ்வராஜு, ”மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் (நூறு நாள் வேலை திட்டம்) கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்து 224 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளில் சுமார் 136 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.
இந்தத் திட்டத்தில் ஒரு கிராமத்தில் பணிகள் செய்யாமலேயே பணிகள் செய்ததாகவும், பணிகளுக்கு ஆகும் செலவை விட கூடுதலாக செலவு செய்ததாகவும் கூறி பண மோசடி செய்துள்ளனர். மேலும் கிராமத்தில் இறந்தவர்களை, இந்தத் திட்டத்தில் வேலை செய்ததாகக் கூறி அவர்களின் பெயரில் பணத்தை எடுத்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் அரசியல்வாதிகளின் துணையோடு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முறைகேடு தொடர்பாக மத்திய அரசின் இணையதளத்திலேயே அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தவிர தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல் பெறப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் இயக்கம் சார்பில் புகார் அளித்துவருகிறோம். சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் தொடர்பாக மாதந்தோறும் நடைபெற வேண்டிய உயர்மட்டக் குழுக் கூட்டம் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இது குறித்து உயர்மட்டக் குழுத் தலைவரான ஆட்சியரிடம் கேட்டால் குழுவின் தலைவரே அவர்தான் என்பதே அவருக்குத் தெரியாது என்று கூறுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
முறையான ஆதாரத்தோடு இந்த முறைகேடுகள் குறித்து புகார் அளித்துள்ளோம். இது குறித்து விசாரித்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடியில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து பணத்தை திரும்பப்பெற வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்” என்று கூறியுள்ளார்.
இதேபோல, வேலூர் மாவட்டத்திலும் இந்தத் திட்டத்தில் சுமார் 239 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அம்மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், “காடு வளர்ப்பு, மரம் வளர்ப்பில் 10 மரங்களை நட்டுவிட்டு ஆயிரம் மரங்கள் நட்டதாகவும் மேற்கண்ட மரங்கள் வறட்சியில் அழிந்து விட்டதாதாகவும் கூறி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிறிய பண்ணை குட்டை கட்டிவிட்டு மிகப் பெரிய பண்ணை குட்டைகள் கட்டியதாக மோசடி செய்தல், இயந்திரத்தை பயன்படுத்தி வேலை செய்துவிட்டு மனித சக்தியை பயன்படுத்தி வேலை செய்வதாகப் போலி ஆவணங்கள் தயார் செய்து நிதியை பயன்படுத்துதல், போலியான பயனாளிகள் பெயரில் நிதியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது.
அந்த வகையில் 2017 18 முதல் 2019-20 வரை மொத்தம் 239 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரத்து 986 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நிதி மோசடி செய்துள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பொறுப்பாளர்கள் மீதும் அலுவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்யப்பட்ட அரசு பணத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
கிராமப்புறத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.