Categories
கால் பந்து விளையாட்டு

கொரோனாவால் தள்ளிப்போன கால்பந்து போட்டிகள் …!!

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், சீன கால்பந்து கிளப் அணிகள் ஆடவுள்ள ஏ.எஃப்.சி. சாம்பியன்ஸ் லீக் தொடரின் குரூப் சுற்றுப்போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை இந்த வைரஸுக்கு 492 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகள் முழுமையான பரிசோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே நேற்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக ஏ.எஃப்.சி. தலைமையகத்தில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் ஏ.எஃப்.சி. சாம்பியன்ஸ் லீக்கில், சீனாவில் இருக்கும் கிளப் அணிகளுக்கான போட்டிகளின் தேதிகளைத் தள்ளிவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி, மார்ச் மாதம் நடக்கவிருந்த 16 போட்டிகள் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.எஃப்.சி. சாம்பியன்ஸ் லீக் தொடரில் சீன கிளப் அணிகள் தங்களின் முதல் 6 போட்டிகளை ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் ஆடவேண்டும் என்றும் ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளில் சீனப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் பிப்.18ஆம் தேதி தாய்லாந்தில் நடக்கவுள்ள சிரங்காய் யுனைடெட் – பெய்ஜிங் குவான் அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |