ஈரான் நாட்டில் ஒரு இளம் பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பிரபலம் போலீஸ் காவலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் தெஹ்ரான் நகரத்தில் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டதில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் பலியானார்.
இதனை எதிர்க்கும் வகையில் நாடு முழுக்க பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களின் ஹிஜாபை கழற்றி எரிந்து நெருப்பு வைத்து கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்போது வரை, குழந்தைகள் 29 பேர் உட்பட எதிர்ப்பாளர்கள் 234 பேர் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் பிரபலமாக இருந்த 19 வயதுடைய மெஹர்ஷாத் ஷாஹிதி, பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்ஜிசி என்ற புலனாய்வு படையினர் தடுப்பு மையத்தில் வைத்து தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பிரபலமான இவர் சமையல்காரர்.
நாட்டில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருக்கிறது. இதனிடைய காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த சமையல்காரர் கொல்லப்பட்டதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். மேலும் அவர் உயிரிழப்பிற்கான காரணத்தை பின்னர் தெரிவிப்போம் என்றும் கூறி இருக்கிறார்கள்.