Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வேற லெவல்” இலவசமா மாஸ்க்….. சமூகஇடைவெளிக்கு குடை….. அசத்திய பூ வியாபாரிகள்…..!!

சென்னை பூக்கடை பஜாரில் பூக்கள் வாங்க வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக குடை வழங்கி சில்லரை வியாபாரிகள் அசத்தியுள்ளனர்.

 தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி தொடங்கிய ஊரடங்கு தற்போதுவரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஆறாவது கட்டட நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் தமிழகம் முழுவதும் தனி கடைகள், சந்தைகள் உள்ளிட்டவை இயங்க தொடங்கிவிட்டன. சென்னையில் பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டும், சென்னை பூக்கடை பஜாரில் இருக்கக்கூடிய பத்திரி தெருவில் இயங்கி வரும் சில்லறை வியாபாரிகள் கடை கடந்த ஊரடங்கு விதிக்கப்பட்ட நாள்முதல் நேற்றுவரை திறக்காமல் மூடி இருந்து வந்தது.

இதற்கான காரணமாக அப்பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது சிரமம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடை திறக்க அனுமதிக்கப்படாததால் அங்குள்ள பெண்கள், விதவைகள், நடுத்தரக் குடும்பத்தினர் என 120க்கும் மேற்பட்ட வியாபாரிகள் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிப்பிற்குள்ளாகியது. இதையடுத்து சில்லறை வியாபார சங்கத்தினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கடை திறக்க அனுமதிக்கக்கோரி மனுக்களை அளித்துள்ளனர்.

கடைசி முறையாக அளித்த மனுவில், தாங்கள் முறையான சமூக இடைவெளியை கடைபிடிக்க வைப்பதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று உறுதி அளித்த பின் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முதல் அப்பகுதியில் சந்தை நடைபெற தொடங்க மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. குவியும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தனியாக காவலாளிகளை சங்கத்தின் சார்பில் சில்லரை வியாபாரிகள் பணியில் அமர்த்தி உள்ளனர்.

மேலும் தெருவின் இரு முனையிலும் காவலாளிகளை நிறுத்தி மக்களை முறையான சமூக இடைவெளியுடன் உள்ளே அனுப்பி வந்தனர். அதிலும் உள்ளே வந்த பின்பும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட ஆயிரம் குடைகளை சொந்த செலவில் வாங்கி அதனை உள்ளே நுழையும் மக்களுக்கு கொடுத்து சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்தனர். பின் அவர்கள் பூக்கள் வாங்கி விட்டு வெளியே வரும்போது குடையை பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டனர்.

சமூக இடைவெளியை கடை பிடிப்பதற்காக இவர்கள் எடுத்த இந்த முயற்சி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பூக்கடையில் பூக்கள் வாங்க வருவோருக்கு தெர்மல் பரிசோதனைக் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு கிருமினாசினியும் வழங்கப்பட்டது.

அதேபோல் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இலவசமாக முககவசத்தை வழங்கியும் பூக்களை வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.நாள்தோறும் வியாபாரம் நடந்தால் மட்டுமே சாப்பாடு என்று இருக்கும் வியாபாரிகள் இலவசமாக இத்தனை உதவிகளையும் மக்கள் நலன்கருதி செய்வது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.

Categories

Tech |