டென்மார்க்கில் விலை உயர்ந்த Lamborghini காரை வாங்கிய ஆர்வத்தில் நார்வேஜியன் ஒருவர் அதை வேகமாக ஓட்டி காவல்துறையினரிடம் பறிகொடுத்த ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.
நார்வேயில் வாழும் பெயர் தெரியாத ஈராக்கியர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை Lamborghini Huracan சொகுசு காரை 310,000 டாலருக்கு ஜெர்மனி சென்று வாங்கியுள்ளார். இதனையடுத்து அவர் அங்கிருந்து நார்வேக்கு (1,250 கிமீ) காரை ஓட்ட முடிவு செய்தார். இந்நிலையில் அதிகபட்சமாக மணிக்கு 130 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் அவர் மணிக்கு 236 கிமீ வேகத்தில் பயணித்தார். இதனை கண்காணித்த டேனிஷ் காவல்துறை அதிகாரி காரை சுற்றி வளைத்து அதிவேகமாக சென்று போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து காரை பறிமுதல் செய்தார்.
மேலும் புதிய டேனிஷ் சட்டத்தின் கீழ், பொறுப்பற்ற ஓட்டுனர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஏலம் விடலாம். இதனால் கிடைக்கும் பணம் டேனிஷ் கருவூலத்திற்கு செல்கிறது. இதனையடுத்து காரின் உரிமையாளருக்கும் அதிவேகமாக சென்றதற்காக அபராதம் விதிக்கப்படும். இவை அனைத்தும் கார் வாங்கிய சில மணி நேரத்திலேயே நடந்தேறியுள்ளது. இத்தகைய அதிவேக சொகுசு கார் வெளிநாடுகளில் வாங்கப்பட்டு சில மணிநேரங்களுக்குள் வேறொரு நாட்டில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட இந்த வேடிக்கையான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.