அறிமுக இயக்குனரான பெருமாள் வரதன் பல்லவர்களை பற்றிய கதையை “நந்திவர்மன்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் சோழர்களை பற்றிய படமாக அமைந்தது. இந்நிலையில் பல்லவர்களைப் பற்றிய திரைப்படம் ஒன்று தயாராகி வருகின்றது. பல்லவ வம்சத்தின் புகழ்பெற்ற மன்னரான நந்திவர்மனின் வரலாற்றுக் குறிப்பைப் பற்றிய இந்த படத்திற்கு “நந்திவர்மன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குனரான பெருமாள் வரதன் இயக்கியுள்ள இந்த படத்தில் “காவல்துறை உங்கள் நண்பன்” புகழ் சுரேஷ் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஆஷா கவுடா நாயகியாக நடிக்கிறார். மேலும் நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், மீசை ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன் மற்றும் ஜே.எஸ்.கே.கோபி போன்ற பலர் நடித்துள்ளனர்.
இதனை அடுத்து இயக்குனர் பெருமாள் வரதன், மரகத நாணயம், ராட்சசன் மற்றும் புரூஸ் லீ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், கன்னி மாடம் படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் மன்னன் நந்திவர்மன் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வஞ்சகத்தால் கொல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. அவர் ஆட்சி செய்த முழு நிலமும் புதைக்கப்படுகின்றது. இதையடுத்து அந்த காலத்திலிருந்து, அந்த இடத்தில் தினமும் மாலை 6 மணிக்கு மேல் இயற்கைக்கு அப்பாற்பட்ட மற்றும் அமானுஷ்ய செயல்கள் நடைபெறுகின்றன.
அந்த இடத்தில் வசிப்பவர்கள் மாலை 6 மணிக்குப் பிறகு தங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். இந்த நேரத்தில், நந்திவர்மன் மற்றும் அவரது ராஜ்ஜியத்தைப் பற்றி அறிய, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு நிலத்தை அகழ்வாராய்ச்சி செய்ய அந்த இடத்திற்கு வருகின்றார்கள். துரதிர்ஷ்டவசமாக, குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றார்கள். இந்த மர்மமான விஷயங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.