நாயை இறக்கமின்றி அடித்துக் கொன்ற கொடூரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் கெருகம்பாக்கத்தை சார்ந்த சத்யராஜ் என்பவர் நாய்களுக்கு உணவு அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய்களுக்கு உணவு வைக்கும் போது உணவு சாப்பிட வரும் ஒரு நாய் காணாமல் போனதை அறிந்து அந்த நாயை அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளார்.
அப்போது ஒரு தனியார் நிறுவனத்திற்குள் முன்னங்கால்கள் உடைந்த நிலையில் முகத்தில் ரத்தம் காயங்களுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த தனியார் நிறுவனத்தில் நாய் புகுந்ததால் ராஜேஷ் கீர்த்தி மற்றும் ரஞ்சித் ஆகியோர் அந்த நாயை இரும்பு ராடால் தாக்கியுள்ளார்கள். இதனை தட்டிக்கேட்ட சத்யராஜை அவதூராக பேசியுள்ளனர். இந்நிலையில் சத்யராஜ் காயமடைந்த நாயை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நாய் உயிர் இழந்ததை அடுத்து அவர் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நிலையில் புதைத்த நாயை எடுத்து உடற்கூறு ஆய்விற்கு அனுப்புமாறு தாசில்தாருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அந்த அறிக்கை வந்த பிறகே நாயை அடித்துக் கொன்றவர்கள் மீது சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.