மகளை ஏமாற்றி கொலை செய்த காரணத்திற்காக மருமகனை கொலை செய்த மாமனார்.
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். வெள்ளகோவில் பேருந்து நிலையத்தின் அருகில் பூக்கடை நடத்தி வருகிறார். இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரது மகளை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும் பிறந்து 10 நாட்களே ஆன ஒரு குழந்தையும் உள்ளது.
சூர்யாவும் வெள்ளகோவில் பேருந்து நிலையத்தின் அருகிலேயே பூக்கடை நடத்தி வருகிறார். வியாபாரம் தொடர்பாக மாமனார் மருமகன் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜசேகருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடைபெற்றிருப்பது சூர்யாவுக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு குடித்துவிட்டு மதுபோதையில் வந்த சூர்யா மருமகன் ராஜசேகரிடம் முதல் திருமணத்தை மறைத்து எதற்காக எனது மகளை காதலித்து திருமணம் செய்தாய் என கேள்வி கேட்டுள்ளார். இதனால் மாமனார் மருமகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சூர்யா மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து ராஜசேகரின் நெற்றி, பின்தலை என குத்தியுள்ளார். இதில் ராஜசேகர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அச்சத்தில் பயந்து ஓடியுள்ளனர். சிலர் ராஜசேகரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து சூர்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.