பிரிட்டனில் ஒரு தந்தை, தன் 3 வயது குழந்தை மீது தவறுதலாக ட்ரக் ஏற்றியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்திருக்கிறது.
வேல்ஸில் இருக்கும் Pembrokeshire கவுண்டி என்ற பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அன்று இரவு நேரத்தில், இயான்டோ ஜென்கின்ஸ் என்ற 3 வயது சிறுவன், தங்களது விவசாய பண்ணையில் சகோதரி மற்றும் ஒரு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில், சிறுவனின் தந்தையான குட்டோ சியோர் என்பவர், விவசாய இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட டிரக்கை ஓட்டி வந்திருக்கிறார்.
அப்போது, அந்த ட்ரக் எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியதில் துரதிஷ்டவசமாக, சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அதன் பின்பு குழந்தையின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, குட்டோ சியோரின் தாயும், இறந்த குழந்தையின் பாட்டியுமான மெய்னிர் ஜென்கின்ஸ் தெரிவித்துள்ளதாவது, எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் எவரையும் குற்றம்சாட்ட முடியாது.
இயான்டோ, புதிய பைக்கில் விளையாடிக் கொண்டிருந்தார். அவன் இருந்தது என் மகனுக்கு தெரியவில்லை. அவன் குழந்தை இருப்பதை பார்க்காமல் வாகனத்தை இயக்கி விட்டான். அப்போது, திடீரென்று பயங்கரமான சத்தம் கேட்டது. அதன் பின்பு ட்ரக்கை நிறுத்தி விட்டு பார்த்தால், குழந்தை அசைவின்றி தரையில் கிடந்தான்.
என் மகன் பாவம், அவன் குழந்தையின்றி எவ்வாறு வாழப் போகிறான் என்று தெரியவில்லை. அவன் முழுவதுமாக உடைந்து போயிருக்கிறான் என்று கூறியிருக்கிறார். மேலும் இறந்த குழந்தையின் தாயான, சோலி பிக்டன் கூறுகையில், என் மகனுக்கு அழகான நீல நிற கண்கள் உண்டு. என் வாழ்க்கையின் அர்த்தமே அவன் தான்.
எந்த நேரத்திலும் புன்னகையுடன் இருப்பான். அவன் நல்ல பையன். இந்த மாதத்தில் பள்ளியில் சேர்வதற்கு மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் இருந்தான். அவனது அனைத்து கனவுகளும் வீணாகப்போனது. எந்தப் பெற்றோருக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.