30 வருடங்களுக்கு முன்பு இறந்த தாயின் சாம்பல் பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டதை கண்டு மகன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பிரிட்டனில் மார்க் ஹாரிஸ் என்பவருக்கு தற்போது 41 வயது ஆகின்றது. இவரது தாய் 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டு சாம்பல் தாழி எனப்படும் பானையில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு கல்லறையின் அருகே புதைக்கப்பட்டது. இந்நிலையில் தனது தாயின் சாம்பலை சிறிதளவு எடுத்து தான் செய்து அணிய இருக்கும் செயினில் சேர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு தாயின் கல்லறைக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற மார்க்கிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது தாயின் கல்லறையின் அருகே பெரிய ஓட்டை ஒன்று இருந்தது. பின்னர் கல்லறை அருகே இருந்த புதைக்கப்பட்ட தாலியை எடுத்து பார்த்த மார்க்கிற்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் தகனம் செய்யப்பட்ட தாயின் சாம்பல் ஒழுங்கற்ற முறையில் பிளாஸ்டிக் கவரில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இது மார்க்கை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இதுபோன்று எத்தனை பேரின் சாம்பலை பிளாஸ்டிக் பையில் வைத்து புதைத்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. பாரம்பரிய முறையை பின்பற்றாமல் இப்படி சாம்பலை அடைத்து வைத்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. யாரோ கல்லறை அருகே தோண்டியுள்ளார்கள். ஆனால் விலங்கு தோண்டியதாக அவ்விடத்தில் இருக்கும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்லறையிலிருந்து தாயின் உடைமைகளை திருட யாரோ முயற்சித்துள்ளார் எனவேதான் இந்த செயல் நடந்துள்ளது என்றே நான் கருதுகிறேன் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து இறுதிசடங்கு கூட்டத்தின் தலைவர் கூறுகையில், “30 வருடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளதால் இதுகுறித்து கண்டுபிடிப்பது சாத்தியமற்ற செயல். இனி புதைக்கப்படும் சாம்பல்கள் முறையாக தாழியில் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்” என கூறினார்.