ஒரு வருடத்திற்கு முன்பு மாயமான மகனை கட்டி தழுவி முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இலவங்கார்க்குடி மேல தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகன் மாதேஷ். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் படிக்க பிடிக்கவில்லை என வீட்டை விட்டு மாதேஷ் வெளியேறினார். அவர் திரும்பி வராததால் அறிவழகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மாதேசை தேடி வந்த நிலையில் அறிவழகனின் செல்போனிற்கு ஓடிபி எண் வந்துள்ளது.
இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆகையால் போலீசார் விசாரணை செய்ததில் அந்த ஓ டி பி எண் மும்பையில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்ததால் வந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி தனிப்படை போலீசார் மும்பைக்கு சென்று மாதேசை கண்டுபிடித்தார்கள்.
அறிவழகன் தனது ஒரே மகன் மாதேசை கண்டதும் கட்டிப்பிடித்து கதறி கதறி அழுதார். ஒரே மகன் சார்…. ஒரே மகன் சார்….. என போலீசாரிடம் புலம்பியபடி அவர் அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. அறிவழகன் மடியில் மாதேஷ் அமர்ந்து கொண்டு அவருக்கு முத்தம் கொடுத்து நீ அழாத அப்பா என கூறினார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மாணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாதேஷ் திருவாரூரில் இருந்து பெங்களூரு ரயிலில் சென்று அங்கிருந்து மும்பை சென்றிருக்கின்றார். அங்கு சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபரான கனகவேல் என்பவரிடம் சேர்ந்துள்ளார். அவரிடம் தனக்கு தாய் தந்தை யாரும் கிடையாது என கூறியதால் மாதேசை தனது மகன் போல் அவர் வளர்த்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் மாதேஷுக்கு மும்பையில் ஆதார் கார்டு எடுப்பதற்காக பதிவு செய்த போது அறிவழகன் செல்போன் எண்ணிற்கு ஓடிபி வந்தது தெரிய வந்திருக்கின்றது.