மும்பையில் ஆண் நண்பருடன் சேர்ந்து சொந்த வீட்டிலேயே திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பையை சேர்ந்த உம்ரதரஷ் குரேஷி என்பவருக்கு உஸ்மா குரேஷி(21) என்ற மகள் உள்ளார். கடந்த ஜூலை 30ஆம் தேதி தனது மகளை காணவில்லை என்று உம்ரதரஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது மகள், அரோரா என்ற நபருடன் வீட்டை விட்டு போயிருக்கலாம் என்று தனக்கு சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அரோரா(35) பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். புகாரின் பேரில் காவல்துறையினர் உஷ்மாவை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் காணவில்லை என்று உம்ரதரஷ்க்கு தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி நகைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதாக கூறி தனது தந்தையிடம் லாக்கர் சாவியை உஷ்மா வாங்கி இருக்கிறார். அதனை நினைவு கூர்ந்த தந்தை, சம்பவம் பற்றி தன் மகள் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் பேரில் தேடுதல் பணியை தீவிரப்படுத்திய காவல்துறையினர், பஞ்சாப் மாநிலத்தில் உஷ்மாவும் அவரது ஆண் நண்பரும் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மும்பை காவல்துறையினர், பஞ்சாப் காவல்துறையினரைதொடர்பு கொண்டு தங்கும் விடுதியில் இருந்த உஷ்மா மற்றும் அரோரா இருவரையும் கைது செய்தனர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது காவல்துறையினர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.