மோட்டார் சைக்கிள் விபத்தில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள வி.மேட்டுப்பாளையம் ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மெடிக்கல் ஏஜென்சி உரிமையாளராக இருக்கின்றார். இவருக்கு சிவகாமசுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் திண்டல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் சொந்த வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்னிமலை சாலையில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது முத்தம்பாளையம் பால்பண்ணை அருகில் வந்தபோது சாலையோரம் கட்டப்பட்டிருந்த எருமை மாடு ஒன்று திடீரென்று சாலையின் குறுக்கே வந்து முத்துகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.
இதில் கணவன்- மனைவி இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். மேலும் கிருஷ்ணனுக்கு லேசான காயமும், சிவகாம சுந்தரிக்கு தலை, தோள்பட்டையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சிவகாமசுந்தரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகாமசுந்தரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படும் வகையில் அந்த மாட்டை சாலை ஓரம் கட்டிய அதன் உரிமையாளர் மணி என்பவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.