சூடானில் உள்நாட்டு போரை தவிர்க்க ஆட்சியை கைப்பற்றியதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
சூடான் நாட்டில் இடைக்கால அரசை கலைத்து ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், பிரதமர் அப்தல்லா ஹம்தக் உட்பட முக்கிய அதிகாரிகளையும் கைது செய்தது. மேலும், அவர்களை இராணுவத்தினர் இரகசியமாக வீட்டுக்காவலில் சிறைபிடித்து வைத்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் இராணுவ தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் கூறியதாவது, “சூடானில் தொடரும் உள்நாட்டு போரை தவிர்க்கவே இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது” என்று கூறினார்.
இதனால், இராணுவ ஆட்சிக்கு கண்டணம் தெரிவித்து சூடான் தலைநகர் கார்தோமில் ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, டயர் மற்றும் வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். மேலும், இராணுவத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தை கலைக்க, இராணுவ அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில், பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் 140-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பங்களால், சூடான் நாட்டு மக்களிடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.