சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில் சட்டவிரோதமாக சீட்டாட்டம் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இடத்தில் 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முருகன், வினோத்குமார், முத்துக்குமார் உள்பட 7 பேர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 7 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ரூ.7120 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.