அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு முன்பாக தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் அதிபர் தலைமையிலான நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது
உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தொற்று பரவல் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் உலகமெங்கும் 1.31 கோடி பேருக்கு கொரோனா தொற்றும், அமெரிக்காவில் 33.64 லட்சம் பேருக்கு தொற்றும் உள்ளது. அமெரிக்காவில் தொற்று சற்று குறைந்த வந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதையொட்டி அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணரும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் அந்தோணி பாசி, ஸ்டான்போர்டு மருத்துவ கல்லூரியுடன் ஒரு இணையதள வழி கருத்தரங்கில் பேசியதாவது, “அமெரிக்காவில் இப்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது.
நாடு ஒரு போதும் முழுமையாக மூடப்படாததே இதற்கு காரணம். ஆமாம், நாம் ஒரு போதும் முழுமையாக நாட்டை மூடிவிட முடியாது. நீங்கள் மூடினீர்கள். ஆனால் உடனே படிப்படியாக திறக்கத்தொடங்கி விட்டீர்கள். கொரோனா வைரஸ் தொற்று நோயின் முடிவைக்கூட அமெரிக்கா காணத்தொடங்கவில்லை. இதற்கு தேவையான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்கும் பணி நடந்துகொண்டு இருக்கிறது. எப்படியும் பாதுகாப்பான ஒரு தடுப்பூசியை இந்த வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் கண்டுப்பிடித்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனிடையே அமெரிக்காவில் கோடை கால முடிவில், அதாவது அடுத்து மாத தொடக்கத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணி தொடங்கி விடலாம்.
இதை டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக சிஎன்பிசி டெலிவிஷன் சேனல் கூறியுள்ளது. மேலும் அந்த டி.வி.சேனல் இதை பற்றி கூறுகையில், “சுகாதார அதிகாரிகளும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் கோடை காலத்தின் கடைசியில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கி விடலாம் என தெரிவித்து இருப்பதாக மூத்த அதிகாரி தெரிவித்தார். தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகள் முடிவு அடைவதற்கு முன்பாகவே அதன் உற்பத்தி தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது
இன்னும் 4ல் இருந்து 6 வார காலத்தில் இந்த தடுப்பூசி தயாரிப்பு பணி தீவிரமாக நடக்கும் எனவும் அது தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வரும் ஜனவரி மாதத்துக்குள் 30 கோடி தடுப்பூசி ‘டோஸ்’களை தயாரிக்கும் வகையில் ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறை ஒன்றிணைந்து சென்ற மே மாதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 3-ந் தேதி ஜனாாதிபதி தேர்தல் வருவதால் அதற்கு முன்பே தடுப்பூசியை கண்டுபிடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தீவிரம் காட்டி வருகிற ட்ரம்ப் நிர்வாகம் சுகாதாரத்துறை, விஞ்ஞானிகள், தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றை முடுக்கிவிட்டுள்ளது .