நாகர்கோவிலில் வீசிய சூறைக்காற்றில் மின்மாற்றி சாய்ந்து 3 மின்கம்பங்களும் சேதமடைந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதேபோன்று நாகர்கோவில் பகுதியில் இரவு முழுவதும் சூறைக்காற்று பலமாக வீசியது. இந்நிலையில் நாகர்கோவிலில் வீசிய சூறைக்காற்றில் கோட்டார் கம்பளம் சந்திப்பில் இருந்து ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையின் ஓரமாக நிறுவப்பட்டிருந்த மின்மாற்றி மீது அப்பகுதியில் நின்றிருந்த தென்னை மரம் ஒன்று சாய்ந்தது.
இதனால் மின்மாற்றி அடியோடு பெயர்ந்து அதன் அருகில் அடுத்தடுத்து நிறுவப்பட்டிருந்த 3 மின்கம்பங்களும் சாய்ந்து சேதமடைந்தன. அப்போது மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசியபோது தீப்பொறிகள் பறந்தன. மேலும் மின்மாற்றி மற்றும் மின்கம்பங்கள் வழியாகச் சென்ற மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால் அப்பகுதியும், ரெயில் நிலைய பகுதிகளில் இருள் சூழ்ந்தது. இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நிகழ்ந்ததால் மக்கள் நடமாட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை.