கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் உலக நாட்டு தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசே இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) பலியானார். மேலும் ஈரான் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயர் (Sophie Grégoire) பூரண குணடைந்துள்ளார்.முன்னதாக, இங்கிலாந்து சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மார்ச் 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவர்களது 3 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது.
இது தொடர்பாக பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, “எனது மனைவி சோஃபி தற்போது நலமாக இருக்கிறார். தற்போது எனது குழந்தைகளும் நானும் நன்றாக உணர்கிறோம்” என்றார். இருப்பினும் அனைத்து கனடா குடிமக்களும் தொடர்ந்து சில வாரங்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தினார்.
கனடாவில் இதுவரை 5,655 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 63 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.