ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அதிநவீன தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றை BSNL நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
விசை படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தூரம் தெரியாமல் எல்லை தாண்டி செல்வது, புயலில் சிக்கி காணாமல் போவது, அண்டை நாட்டு கடற்படையிடம் சிக்குவது என பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். ஆள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் தரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றதும் செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. தற்போது பயன்படுத்தி வரும் சேட்டிலைட் போனில் இருந்து தகவல்களை பெறலாம் என்றாலும் பதிலுக்கு மீனவர்கள் பேசவோ தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் ஓமன் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஆழ்கடலில் பயன்படுத்தும் வகையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேட்டிலைட் போன்களை தயாரித்து வந்தது.
இந்த நவீன போன் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சோதனை செய்யப்பட்டது. இந்த சேட்டிலைட் போனில் தொடுதிரையுடன் கூடிய போன் வசதி குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வானிலை குறித்த எச்சரிக்கை, வீடியோ கால், துல்லியமான திசைகாட்டி, உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இருக்கின்றன. இது தங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். இது குறித்து மீனவர்கள் விரிவாக கூறுகையில்,
ஏற்கனவே நாங்கள் சாட்டிலைட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அது எங்களுக்கு அவ்வளவு பெரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை. அதைவிட கூடுதலான வசதிகள் இந்த போனில் உள்ளது. இத்தகைய கூடுதலான சிறப்பு வசதிகளை கொண்ட இந்த தொலைத்தொடர்பு சாதனத்தை தமிழக அரசாங்கம் மீனவர்களுக்கு மானிய விலையில் அளித்தால் மகிழ்ச்சி பெறுவோம் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மத்திய அரசுக்கு சான்றிதழ் வழங்கிய பின்பு இந்த அதிநவீன சாட்டிலைட் போன் மானிய விலையில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.