சொத்து தகராறில் தனது தாயை குத்தி கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்திலுள்ள விக்ரமசிங்கபுரம் பகுதியில் பாடகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உலகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு முத்துசாமி என்ற மகன் இருக்கிறான். தாய், மகன் இருவருக்குமிடையே சொத்துப்பிரச்சனை காரணமாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் தனது வயல் பகுதியை உலகம்மாள் விற்றதால் முத்துசாமி மிகவும் கோபமடைந்தார். இதுகுறித்து தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் உலகம்மாள் தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அந்த சமயம் முத்துசாமி தனது தாயை பின்தொடர்ந்து வந்து அவரின் முதுகில் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதனால் பலத்த காயமடைந்த உலகம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விக்ரமசிங்கபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உலகம்மாளின் சடலத்தை மீட்டு அம்பை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முத்துசாமியை கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.