அறந்தாங்கி அருகே சந்தமணி கிராமத்தில் சொத்து பிரச்சனையில் பாட்டியை கொன்ற பேரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள சந்தமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி வள்ளியம்மை தன் மகள் கலைஅரசி என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பூர்வீக சொத்து தொடர்பாக வள்ளியம்மைக்கும், கலையரசியின் மகன் பிருத்வி ராஜ் என்ற சுப்பிரமணியனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.
இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாட்டி வள்ளியம்மை, பேரன் சுப்பிரமணியம் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்பிரமணியன் தாக்கியதில் 80 வயதான மூதாட்டி வள்ளியம்மை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து வள்ளியம்மையின் உடலில் காயம் இருப்பதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் சுப்பிரமணியன் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில் தலைமறைவாக இருந்த சுப்பிரமணியனை காவல்துறையினர் கைது செய்தனர்.