ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் தோனி நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்கு சவ்ரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் 25 வது லீக் போட்டியில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது. இப்போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்தது.
இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சேன் வாட்சனும், பாப் டுப்லெஸியும் களமிறங்கினர். முதல் ஓவரில் வாட்சன் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ரெய்னா 4, பாப் டுப்லெஸி 7, கேதார் ஜாதவ் 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் சென்னை அணி 6 ஓவரில் 24/4 விக்கெட் இழந்து தடுமாறியது.அதன் பின் கேப்டன் தோனியும், அம்பத்தி ராயுடுவும் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தனர்.
இறுதியில் அம்பத்தி ராயுடு 57 (47) ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்தை ஜடேஜா சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரில் தோனி 58 (43) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஓவரில் ஒரு பந்தை மிச்சேல் சான்ட்னர் எதிர்கொண்ட போது இடுப்புக்கு மேல் வந்ததால் நடுவர் “நோ பால்” அறிவித்தார்.
மற்றொரு நடுவர் நோபால் கிடையாது என்று அறிவித்தார். இது பற்றி ஜடேஜா நடுவரிடம் கேட்டுக் கொண்டிருக்க இதனை வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த கேப்டன் தோனி கோபத்துடன் மைதானத்துக்குள் வந்து நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நடுவர்கள் நோபால் வழங்காமல் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இறுதியில் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட மிச்சேல் சான்ட்னர் அபாரமாக ஒரு சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். சென்னை அணி இந்த வெற்றியின் மூலம் 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
தோனி நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஐ.பிஎல் நிர்வாகம் போட்டியில் உள்ள சம்பளத்தில் பாதி 50% அபராதம் விதித்தது. மேலும் தோனியின் இந்த செயலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் .தோனியின் இந்த நடவடிக்கை தவறான முன்னுதாரணம் எனவும் சாடினார். இந்நிலையில் எதிர்ப்புக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி தோனிக்கு ஆதரவு தெரிவித்தார் . அவர் பேசும் போது அனைவரும் மனிதர்கள் தான் அவருடைய போட்டித்தன்மை என்னை வியக்க வைக்கிறது என்று கூறினார்.