தென்னாபிரிக்க அரசு, ஓமைக்ரான் வைரஸ் தொடர்பில் வெளியில் தெரிவித்ததற்கு எங்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும், தண்டிக்கக்கூடாது என்று உலக நாடுகளிடம் தன் வருத்தத்தை தெரிவித்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டது. இது அதிக வீரியம் கொண்டது என்றும் வேகமாக பரவும் திறன் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடையை அறிவித்தது.
இந்நிலையில், தங்கள் நாட்டில் ஓமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பில் தென்னாப்பிரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதில், தென்னாபிரிக்காவை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் வைரஸ் தான் என்று கூறப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பிற நாடுகளை போன்று நாங்களும் முன்னுதாரணமாக விளங்கினோம்.
தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்தினோம். எங்கள் நாட்டில் பரவிய புதிய வைரஸ் மாறுபாடு தொடர்பிலும் வெளியில் தெரியப்படுத்தினோம். எங்களது இந்த நடவடிக்கைக்காக பாராட்டுக்களை தான் கூற வேண்டும், தண்டிக்கக் கூடாது. உலகின் வேறு பகுதிகளிலும் புதிய வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டிருக்கிறது.
அதை யாரும் மறுக்க முடியாது. எனினும், அனைத்து மாறுபாடுகளும், தென்ஆப்பிரிக்கா நாட்டுடன் சமீபத்தில் தொடர்பில் இல்லை என்பதை சமூகம் மனதில் வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.