வடகொரியா, தென்கொரிய நாட்டிற்குள் அத்துமீறி ட்ரோன்களை அனுப்பியது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.
வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகள் மேற்கொண்டு தென்கொரியாவையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று தென்கொரிய நாட்டிற்கு ஐந்து ட்ரோன்களை வடகொரியா அனுப்பியிருக்கிறது.
தென்கொரிய நாட்டின் எல்லைக்குள் அவை அத்துமீறி புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஜியோங்கி மாகாணத்திற்குள் அந்த ட்ரோன்கள் நுழைந்து வட்டமிட்டுள்ளன. அதில், ஒரு ட்ரோன் தென்கொரியாவின் தலைநகரினுடைய வட எல்லைப்பகுதி வரை பறந்திருக்கிறது.
எனவே, தென்கொரிய நாட்டில் அதிக பதற்றம் ஏற்பட்டது. அதனையடுத்து தென்கொரிய அரசு தங்கள் விமான படைகளை தயார்ப்படுத்தியது. வடகொரியாவால், அனுப்பப்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்த போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் விரைந்து சென்றன. ஹெலிகாப்டர்களிலிருந்து சுமார் 100 முறை ட்ரோன்களை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால் அந்த ட்ரோன்கள் முற்றிலுமாக வீழ்த்தப்பட்டதா? அல்லது விரட்டியடிக்கப்பட்டதா ? என்று தென் கொரிய ராணுவம் தெளிவாக தகவல் வெளியிடவில்லை.