சீனாவைச் சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள், விண்வெளியில் ஆய்வு மைய கட்டமைப்பு பணிகளை முடித்துவிட்டு 90 தினங்கள் கழித்து பாதுகாப்பாக பூமி வந்தடைந்துள்ளார்.
சீன அரசு தங்களுக்கென்று சொந்தமாக விண்வெளியில் ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது. வரும் 2020ஆம் வருடத்திற்குள் இந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கான கட்டமைப்பு பணிகளை முடித்து, பயன்படுத்தும் வகையில் உருவாக்க சீனா முடிவெடுத்துள்ளது. இந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு, “தியான்ஹே” என்று பெயரிட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், சுற்றுவட்ட பாதையில், இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மையப்பகுதியை நிலை நிறுத்தினார்கள். அதன்பின்பு, அங்கு கட்டமைப்பு பணிகளை செய்வதற்காக, லியு போமிங், நை ஹைஷெங் மற்றும் டாங் ஹோங்போ போன்ற விண்வெளி வீரர்கள், ‘சென்ஷு 12’ என்ற விண்கலத்தில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று விண்வெளிக்கு சென்றடைந்தனர்.
அங்கு விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். அதனையடுத்து, 90 தினங்கள் விண்வெளியில் இருந்து, கட்டமைப்பு பணிகளை முடித்துவிட்டு, விண்வெளி வீரர்கள் மூவரும் கடந்த வியாழக்கிழமை அன்று காலையில், அதே விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம், சீன வடக்குப் பகுதியில் இருக்கும் கோபி பாலைவனத்தில், மூவரும் வெற்றிகரமாக விண்கலத்தில் பூமி வந்திறங்கினர். 3 வீரர்களும், நலமுடன் உள்ளதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.