ஸ்பெயின் நாட்டை சேர்ந்த குடும்பத்தினர், துபாய் கடல் பகுதிக்கு சென்ற போது, படகு பழுதடைந்ததால், பரிதவித்துள்ளனர்.
துபாய் உள்ள ஜுமைரா என்ற பகுதியில் இருக்கும் கடல் பகுதிக்கு ஸ்பெயினை சேர்ந்த குடும்பத்தினர் படகில் சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் கடலைப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக சென்ற போது, படகு திடீரென்று பழுதடைந்து நடுக்கடலில் மாட்டிக்கொண்டது. அது மிகவும் அபாயமான பகுதி.
எனவே அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றமடைந்துள்ளனர். அதன் பின்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி அங்கு விரைந்து வந்த மீட்பு படையினர் படகில் இருந்த 6 பேரையும் மீட்டு, பாதுகாப்பாக கரைக்கு கொண்டு சேர்த்தனர்.
துபாய் கடல் பகுதியின் மீட்பு படையின் தலைவரான அலி அப்துல்லா அல் நக்பி என்பவர் தெரிவித்துள்ளதாவது, கடல் பகுதிகளுக்கு செல்லும் நபர்கள் காவல் துறையினரின் உதவி செயலியை பதிவிறக்கி வைக்க வேண்டும்.
அதன் மூலம் ஆபத்தான சமயங்களில் தகவல் தெரிவித்தவுடன் மீட்பு படையினர் அவசர உதவிகளை அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஸ்பெயின் குடும்பத்தினர் துபாய் காவல்துறையினரின் அவசர உதவிக்கு மிகுந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்கள்.