மொரோக்கோவிலிருந்து கடல் வழியாக நீந்தியே ஸ்பெயின் நாட்டிற்கு வந்த அகதி ஒருவரை, தன்னார்வலர் ஆறுதல் கூறி தேற்றும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
மொரோக்கோவிலிருந்து ஸ்பெயின் நாட்டின் சியூட்டா என்ற நகரினுள் கடல் வழியாகவும் தரை வழியாகவும் அகதிகள் ஆயிரக்கணக்கானோர் நுழைந்து வருகின்றனர். தடுப்புச் சுவர்களை தாண்டியும் அகதிகள் நுழைந்து வருவதால் சியூட்டா நகரின் எல்லையில் அவர்களை தடுப்பதற்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
அவர்கள், பிடிபடும் அகதிகளை திரும்ப மொரோக்கோ நாட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். தற்போது வரை சுமார் 6000 நபர்கள் அவ்வாறு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு அகதி மொரோக்கோவிலிருந்து கடல் வழியாக நீந்தியே ஸ்பெயினிற்கு வந்து விட்டார். அதன் பிறகு அவர் உடல் சோர்வடைந்து கடற்கரையில் சுருண்டு படுத்துள்ளார்.
அவரை பார்த்த லூனா ரியஸ் என்ற பெண் தன்னார்வலர், உடனடியாக அவருக்கு தண்ணீர் கொடுத்ததோடு அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறித்தேற்றினார். அப்போது அந்த அகதி கண்ணீர் வடிக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.