அமைச்சர் உதயகுமார் உத்தமரைப் போல பேட்டிகள் கொடுகின்றார், ஆனால் மத்திய அரசு முகத்தை கிழித்துத் தொங்கவிட்டுச்சு என திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மதுரையில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், விஜயபாஸ்கரை, குட்கா விஜயபாஸ்கர் என்று சொல்வதைப் போல ஆர்.பி.உதயகுமாரை, பாரத் நெட் ஊழல் உதயகுமார் என்று அழைக்கலாம். சுமார் 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப் பார்த்தார் உதயகுமார். கிராமங்கள் அனைத்துக்கும், ‘இன்டர்நெட்’ இணைப்பு வழங்குவதற்காக மத்திய அரசு ‘பாரத் நெட்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை ‘ஆப்டிக்கல் பைபர் கேபிள்’ என்ற கண்ணாடி இழை கம்பி வழியாக இணைக்க வேண்டும். இதற்காக சுமார் 2,000 மதிப்பிலான டெண்டர் கோரப்பட்டது. சில நிறுவனங்களுக்கு சாதகமாக, டெண்டர் நிபந்தனைகளில் அமைச்சர் உதயகுமார் மாற்றம் செய்துவிட்டதாக செய்திகள் பரவின. நான் விரிவாக அறிக்கை வெளியிட்டேன். ஆனால் உதயகுமார் மறுத்தார். நான் சொல்வது தவறு என்றார். அமைச்சருக்கு விளக்கமான பதிலை அன்றைய தினம் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி அவர்களும் அறிக்கை மூலமாகக் கொடுத்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் இது பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையில் நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார். வழக்கம் போல லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம். டெண்டரே விடவில்லை, விடாத டெண்டரில் எப்படி முறைகேடு நடந்திருக்க முடியும் என்று நீதிமன்றத்திலேயே பொய் சொன்னார்கள்.
ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த டெண்டரையே நிறுத்தி வைக்க மத்திய அரசு சொல்லி விட்டது. தி.மு.க. ஏதோ பொய் சொன்னதாகவும், தி.மு.க.வுக்குப் பின்னடைவு என்றும் உதயகுமார் உத்தமரைப் போல பேட்டிகள் கொடுத்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த டெண்டரையே நிறுத்தி வைக்க மத்திய வர்த்தக அமைச்சகம் சொல்லி விட்டது. உதயகுமாரின் ஊழல் முகத்தை மத்திய அரசே கிழித்துத் தொங்கவிட்டு விட்டது. ஒப்பந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததுதான் இந்த ஒப்பந்த ரத்துக்குக் காரணம் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது என ஸ்டாலின் தெரிவித்தார்.