பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வரும் வகையில் 30,000 சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவில் சுமார் 6.64 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று சிறப்பிக்கும் வகையில் வகையிலும் அவர்களது பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் ஜனவரி 10ம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்பே பெறும் வகையில் www.redbus.in உள்ளிட்ட இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்பொழுது பொதுமக்கள் நேரில் சென்று டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 மையங்கள், தாம்பரம் பூந்தமல்லி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் தலா ஒன்று என மொத்தம் 17 மையங்கள் சிறப்புப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த மையங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். இந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொங்கலுக்கு பொதுமக்கள் எந்த ஒரு சிரமமுமின்றி சென்று வருவதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு டிக்கெட்கள் கடந்த 60 நாட்களாக நன்றாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை டிக்கெட் விற்பனை பணம் மட்டும் 6.64 கோடி வசூல் ஆகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.