தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவ.11 முதல் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறை மூலம் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் நவ.11 முதல் இயக்கப்படும் எனவும் மேலும் வழக்கம் போல சென்னையில் இருந்து 5 இடங்களில் தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 13 முன்பதிவு மையங்களில் இதுவரை 27000 பேர் தீபாவளிக்கு வெளியூர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு 14,757 சிறப்பு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு 18,544 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 14,757 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட உள்ளன என அவர் தெரிவித்தார். நவ.11, 12, 13-ந்தேதிகளில் தீபாவளி சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்குப் பிறகு நவ. 15, 16, 18 தேதிகளில் மீண்டும் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அவர் கூறினார். மேலும் குறைவாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் விரைவாக முன்பதிவு செய்துகொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.