சிறப்பு வாகன சோதனையின் போது விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், சக்திவேல், கருணாநிதி ஆகியோர் பள்ளிகொண்டா சுங்கசாவடி அருகில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களின் ஓட்டுனர்கள் சீருடை அணிந்துள்ளனரா என்றும், ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கின்றார்களா என்றும், தகுதி சான்றிதழானது புதுப்பிக்கப்பட்டு உள்ளதா என்றும் ஆய்வு நடத்தினர்.
அப்போது பம்பர் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்த கார்களுக்கும், முகப்பு விளக்குகளில் எல்.இ.டி லைட் பொருத்தியிருந்த வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 17 வாகனங்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து தமிழக நுழைவு வரி செலுத்தாமல் வந்த கர்நாடக லாரி ஒன்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் வருகின்ற 18ஆம் தேதி வரை இந்த சிறப்பு வாகன சோதனையானது தொடரும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.