கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதுவரை லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸிற்கு பலியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் பலவும் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வர தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களுக்கு விரைவான அனுமதி, சிறப்பு சலுகைகள் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
கொரோனா தாக்கத்திற்கு பிறகு தமிழகம் எப்போதும் போல் துடிப்புடன் செயல்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ள முதல்வர், வெளிநாடுகளில் இருந்து இடம்பெயரும் நிறுவனங்களை இந்தக் குழு கண்டறியும் என்றும் ஒரு மாதத்திற்குள் இந்தக் குழு அறிக்கை அளிக்கும் என்றும் தகவல் அளித்துள்ளார். மேலும் இடம்பெயர வாய்ப்புள்ள நிறுவனங்களை கண்டறிதல், சிறப்பு சலுகைகள், வழிமுறைகள் உள்ளிட்ட பணிகளை இந்த சிறப்பு குழு மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் கூறியுள்ளார்.