Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு!

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 4 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, ஒரு காவல் அதிகாரி கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகமாக உள்ள மண்டலங்களில் கூடுதலாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 1ம் தேதி சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல சென்னை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு மண்டலமாக பிரித்து ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் சென்னையில் பாதிப்புகள் 8,000-ஐ நெருங்கும் கட்டத்தில் உள்ளது. எனவே சென்னையில் கொரோனா அதிகமாகாமல் அதனை கட்டுப்படுத்த கொரோனா சிறப்பு அதிகாரிகளை 15 மண்டலத்திற்கு நியமனம் செய்துள்ளது. மண்டலம் -1 க்கு காமராஜ் ஐஏஎஸ், மண்டலம் -2க்கு அமர் குஷ்வா ஐஏஎஸ் அதிகாரி, மண்டலம் 3க்கு கணேஷ் சேகர் ஐஏஎஸ், மண்டலம் 4க்கு கார்த்திகேயன் ஐஏஎஸ்,

மண்டலம் 5க்கு நந்தகுமார் ஐஏஎஸ், மண்டலம் 6 – அருண் தம்புராஜ் ஐஏஎஸ், மண்டலம் 7க்கு முனியன் ஐஏஎஸ், மண்டலம் 8க்கு கோபால சுந்தரராஜ் ஐஏஎஸ், மண்டலம் 9க்கு சந்திரசேகர் ஐஏஎஸ், மண்டலம் 10க்கு வினித் ஐஏஎஸ், மண்டலம் 11 – வெங்கடேஷ் ஐஏஎஸ், மண்டலம் 12க்கு ஷண்முகம் ஐஏஎஸ், மண்டலம் 13க்கு சந்திரகலா ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |