மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இதை காண பல்வேறு மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் வருவார்கள். இந்த போட்டியை காணும் வகையில் சுற்றுலா துறை சிறப்பு சுற்றுலா பயணத்தை அறிமுகம் செய்துள்ளது.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா துறை வளாகத்திலிருந்து ஜனவரி 16ஆம் தேதி இரவு 9 மணிக்கு சுற்றுலா சொகுசு பேருந்து புறப்படும். 17ஆம் தேதி காலை 5:30 மணிக்கு அந்த பேருந்து மதுரை சென்றடையும். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஹோட்டலில் காலை உணவு வழங்கப்பட்டு 10 மணிக்கு அலங்காநல்லூர் சென்றடையும்.
ஜல்லிக்கட்டை பார்வையிட்ட பின்பு அன்றைய தினம் இரவு மதுரையில் உள்ள விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்படும். பின்னர் 18ஆம் தேதி காணும் பொங்கல் அன்று மதுரை மீனாட்சி கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், அழகர் கோயில் ஆகிய இடங்களுக்கு வழிகாட்டி உதவியுடன் அழைத்து செல்லப்படுவர். 18ஆம் தேதி இரவு 10 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் பேருந்து 19ஆம் தேதி காலை சென்னை வந்தடையும். இந்த சுற்றுலாவுக்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 4,300, சிறியவர்களுக்கு (6 -12 வயது) 3,450 ரூபாய் வசூலிக்கப்படும். குளிர் சாதன அறை தேவைப்பட்டால் 4,500 ரூபாய் வசூலிக்கப்படும்.
மேலும் தகவலுக்கு, http://www.tamilnadutourism.org/ என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.