பொது இடங்களில் எச்சில் துப்பவோ, சிறுநீர் கழிக்கவோ கூடாது. அவ்வாறு மீறினால் குறிப்பிட்ட நபருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 911 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 27 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 6 பேர் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா பரவலை தடுக்க டெல்லி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதையும், எச்சில் துப்புவதையும் தடுக்க முடிவு செய்தது. இதன் காரணமாக, பொது இடங்களில் எச்சில் துப்பினால், சிறுநீர் கழித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.