இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 பிளஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் டி.யு.வி.300 பிளஸ் 2020 மஹிந்திரா தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடல்களில் உள்ள பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டி.யு.வி.300 பிளஸ் கார் தற்காலிக ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. இதனுடன் ஆறு ஸ்லேட் கிரில், பிளாக் ஹனிகோம்ப் பேட்டன் மற்றும் முன்புறம் முற்றிலும் புதிய வடிவமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதில் பின்புறமும் காரின் பக்கவாட்டுகளிலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த 2020 டி.யு.வி.300 பிளஸ் மாடலின் உள்புறம் மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டி.யு.வி.300 பிளஸ் மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது. குறிப்பாக இந்த என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.