இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 264 ரன்கள் குவித்துள்ளது
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஹெட்டிங்லே மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் முகமது ஷமி, சஹல் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணி ஏற்கனவே 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்த போட்டி பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக கருணாரத்னேவும், குசல் பெரேராவும் களமிறங்கினர். பும்ரா வீசிய 4-வது ஓவரில் கருணாரத்னே 10 ரன்களிலும், அவர் வீசிய 8-வது ஓவரில் குசல் பெரேராவும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய அவிஷ்கா பெர்ணான்டோ 20, குசால் மெண்டிஸ் 3 ரன்களிலும் வெளியேறியதால் இலங்கை அணி சரிவை நோக்கி சென்றது. இந்த நிலையில் இலங்கை அணி 11.4 ஓவரில் 4 விக்கெட் இழந்து 55 ரன்களுக்கு தடுமாறியது.
இதையடுத்து ஆஞ்சலோ மேத்யூஸும், திரிமன்னேவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி நிலைத்து அடிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின் இந்த ஜோடி பிரிந்தது. திரிமன்னே 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து சிறப்பாக ஆடிய மேத்யூஸ் சதம் விளாசினார்.
கடைசியில் மேத்யூஸ் 113 ரன்களில் ஆட்டமிழந்தார். தனஞ்செயா டி செல்வா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 264 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் இந்திய அணி 265 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.