இலங்கையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு என்று காவல்துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நச்சத்திர விடுதிகளில் தற்கொலப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர தீவிரவாத தாக்குதலை அடுத்து இலங்கை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கலவரத்தால் கொழும்பு அருகேயுள்ள புட்டாளம், குருநெங்களா மற்றும் கம்பகா ஆகிய மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் , அங்கு பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் , சம்மந்தப்பட்ட 3 மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணி வரைக்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும், இலங்கை நாடு முழுவதும் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் காவல் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.